ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தது
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.
கிருஷ்ணா நதி நீர்
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தை செய்து உள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அணைக்கு ஆண்டுக்கு 2 தவணைகளாக 12 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.
அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப, நீர் இருப்புக்கு தகுந்தாற்போன்று ஆந்திர அரசு தண்ணீரை திறந்துவிட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 2-வது தவணை தண்ணீரை திறந்து விட தமிழக அரசின் பொதுப்பணித்துறையினர், ஆந்திர மாநில அரசின் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மலர் தூவி வரவேற்பு
அதன் அப்படையில், ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 5-ந்தேதி 1,500 கன அடி கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் 152 கிலோமீட்டர் தூரம் உள்ள கால்வாய் வழியாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வந்தது. இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரமுள்ள பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து உள்ளது. அதனை நீர்வளத்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.
நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் 2-வது தவணையாக மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 6 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு தரப்பட வேண்டும். அதன்படி தற்போது திறக்கப்பட்ட நீரில் 293 கன அடி வீதம் நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.
நீர் இருப்பு
குடிநீர் வழங்கும் ஏரிகளில், 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,282 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 133 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 944 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 466 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
அதேபோல், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 471 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 351.20 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 7 ஆயிரத்து 647 மில்லியன் கன அடி (7.6 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story