பிளஸ்-1 தேர்வை 23,062 மாணவ-மாணவிகள் எழுதினர்
குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 23 ஆயிரத்து 62 மாணவ-மாணவிகள் எழுதினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 23 ஆயிரத்து 62 மாணவ-மாணவிகள் எழுதினர்.
பிளஸ்-1 தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் பிளஸ்-1 தேர்வு 85 மையங்களில் நடந்தது. தேர்வு எழுதுவதற்காக 23 ஆயிரத்து 532 மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் இதில் 470 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதைத் தொடர்ந்து 23 ஆயிரத்து 62 பேர் தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வு எழுத மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்தனர். பெரும்பாலான மாணவர்கள் தங்களது பெற்றோருடன் தேர்வு மையத்திற்கு வந்ததை பார்க்க முடிந்தது. தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறைக்கு சென்றனர். தேர்வறைக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பறக்கும் படை
அதே போல் தேர்வு மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் மற்றும் தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மற்றும் திருவட்டார் ஆகிய 4 கல்வி மாவட்டத்திலும் தேர்வை கண்காணிக்க 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு
தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் நாகர்கோவில் டதி பள்ளிக்கும், தக்கலை கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அமலா கான்வென்ட் பள்ளிக்கும், குழித்துறை கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளிக்கும், திருவட்டார் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் படந்தாலுமூடு திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story