சொத்துத்தகராறில் கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகள் கைது


சொத்துத்தகராறில் கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகள் கைது
x
தினத்தந்தி 10 May 2022 10:13 PM IST (Updated: 10 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி முதியவர் கொலையில் திடீர் திருப்பமாக சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகள் கைது செய்யப்பட்டார். மருமகன் உள்பட மேலும் 3 பேரும் சிக்கினர்.

தென்காசி:
தென்காசி முதியவர் கொலையில் திடீர் திருப்பமாக சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகள் கைது செய்யப்பட்டார். மருமகன் உள்பட மேலும் 3 பேரும் சிக்கினர்.

முதியவர் கொலை

தென்காசி அருகே உள்ள இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டை மாடன் (வயது 82). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மைதீன் பாத். முன்னாள் இலஞ்சி பேரூராட்சி தலைவி. 2-வது மகள் சந்திரா. 3-வது மகள் ஸ்ரீதேவி (53). கோட்டை மாடன் சந்திராவின் வீட்டில் வசித்து வந்தார்.

கோட்டை மாடனுக்கு சொந்தமான மாந்தோப்பு இலஞ்சி-தென்காசி ரோட்டில் அமைந்துள்ளது. கடந்த 4-ந்தேதி காலை 6 மணிக்கு அவர் அந்த தோப்புக்கு சென்றார். அதன்பிறகு காலை 8 மணியளவில் அவரது மகள் சந்திரா தோப்புக்கு சென்றபோது, அங்கு கோட்டை மாடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

மகள் உள்பட 4 பேர் கைது

இதுகுறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே மோப்பநாயை கொண்டு சம்பவ இடத்தில் துப்பு துலக்கியபோது, அது கோட்டை மாடனின் மூத்த மகள் மைதீன் பாத்தின் கணவர் பரமசிவனின் (57) மோட்டார் சைக்கிளை சுற்றி வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். 

இதில் திடீர் திருப்பமாக கோட்டை மாடன் கொலையில் அவருடைய 3-வது மகள் ஸ்ரீதேவி, பரமசிவன் மற்றும் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வசந்தகுமார் (49), இலஞ்சியை சேர்ந்த சேகர், மகேஷ் (29) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களில் சேகரை தவிர மற்ற 4 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேகர் பரமசிவனின் வீட்டில் வேலை செய்து வந்தார். லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார்.

திடுக்கிடும் தகவல்கள்

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- 
கோட்டை மாடனுக்கு சொந்தமாக 1½ ஏக்கர் மாந்தோப்பு உள்ளது. அவர் தனது மரணத்துக்கு பிறகு அந்த தோப்பை தனது 2-வது மகள் சந்திராவின் மகன் ஜெயக்குமாருக்கு எழுதி வைக்க இருப்பதாக கூறி இருந்தார். ஏற்கனவே இந்த சொத்து தொடர்பாக ஸ்ரீதேவி தனது தந்தைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது.

சொத்து தங்களுக்கு கிடைக்காது என்ற நிலை வந்தபோது பரமசிவன், ஸ்ரீதேவி ஆகியோர் கோட்டை மாடனை கொலை செய்ய திட்டமிட்டனர். இதுகுறித்து சேகரிடம் கூறினர். சேகர் தனக்கு தெரிந்த நண்பர்களான கூலிப்படையைச் சேர்ந்த கல்லிடைக்குறிச்சி வசந்தகுமார், இலஞ்சியை சேர்ந்த மகேஷ் ஆகியோரிடம் கூறி இவர்கள் 3 பேரும் சேர்ந்து கோட்டை மாடனை கொலை செய்வதாக தெரிவித்து உள்ளனர். அதற்கு        பரமசிவனும்,  ஸ்ரீதேவியும் ரூ.1 லட்சம் தருவதாக பேசி, ரூ.15 ஆயிரம் கொடுத்து இருக்கின்றனர்.

மரம் வாங்குவது போல்...

கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சேகர், வசந்தகுமார், மகேஷ் ஆகியோர் கோட்டை மாடனை சந்தித்து மரம் விலைக்கு வேண்டும் என்று பேசி உள்ளனர். 2 முறை அந்த தோப்பில் வைத்து அவரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் ஆட்கள் வந்ததால் அவர்கள் முயற்சி பலிக்காமல் திரும்பி சென்று விட்டனர்.

கடந்த 4-ந் தேதி காலையில் மீண்டும் அங்கு சென்ற 3 பேரும் கோட்டை மாடனிடம் பேசி, மரம் வெட்டும் எந்திரத்தால் ஒரு மரத்தை அறுத்துள்ளனர். அதனை கோட்டை மாடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கோட்டை மாடனின் கழுத்தில் ஒரு மரக்கட்டையால் பலமாக தாக்கினர். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்று உள்ளனர். 
இவ்வாறு விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

கைதான 4 பேரும் சிவகிரி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சொத்து தகராறில் தந்தையை மகளே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும்  பரபரப்பை     ஏற்படுத்தி உள்ளது.

Next Story