கர்நாடகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம் தகவல்


கர்நாடகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 10 May 2022 10:32 PM IST (Updated: 10 May 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பெங்களூரு: 

மக்கள் மகிழ்ச்சி

  கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். 2 நாட்களாக பகலில் வெயில் பாதிப்பு இருந்தது. ஆனால் இரவில் மழை கொட்டியது.

  இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக தலைநகர் பெங்களூருவில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கருமேகங்கள் ஒன்றுகூடி இருள் சூழ்ந்தது. நகரில் குளிர் காற்று வீசியது.

 அவ்வப்போது சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மழை சற்று பலமாகவும் இருந்தது. இது கோடை காலமா? என்று அனைவரும் தங்களை தாங்களே ஆச்சரியமாக கேட்டுக்கொள்ளும் வகையில் சீதோஷ்ணநிலை நிலவியது.

பெங்களூருவில் மழை

  பகலில் மழை பெய்யவில்லை என்றாலும் மதியத்திற்கு மேல் பெங்களூருவில் திடீரென மழை பெய்தது. பெங்களூரு ராஜாஜிநகர், விஜயநகர், ஆர்.ஆர்.நகர், மல்லேசுவரம், சேஷாத்திரிபுரம், யஷ்வந்தபுரம், கப்பன் பார்க், சிவாஜிநகர், எம்.ஜி.ரோடு, கோரமங்களா, இந்திராநகர், எச்.எஸ்.ஆர். லே-அவுட், பி.டி.எம். லே-அவுட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

 இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
  இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். குடை கொண்டு வராத மக்கள் மழையில் நனைந்தபடி சென்றதையும் காண முடிந்தது. இந்த மழைக்கு ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. அதேநேரம் பலத்த மழை காரணமாக ராஜகால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
பெங்களூரு தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெயில் பாதிப்பு குறைந்து காணப்பட்டது.

3 நாட்களுக்கு மழை

  அசானி புயலின் தாக்கத்தால் கர்நாடகத்தில் இன்று  முதல் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது கடலோர கர்நாடகம், பெங்களூரு உள்பட தென் கர்நாடகம் மற்றும் வட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் கூறியுள்ளது.


Next Story