தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாணவர்களின் கல்வி பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் கடந்த 1924-ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 36 ஆண்கள், 51 பெண்கள் என மொத்தம் 87 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏழை-எளிய மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர்.
அடிப்படை வசதிகள் செய்துதரப்படுமா?
அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான தார்ச்சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஆறுபோல் ஓடுகிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்டவை பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இலந்தைக்கூடம், அரியலூர்.
நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து இரவு 9.10 மணிக்கு ஆலவயல் பாலகுறிச்சி வழியாக திருச்சி வரை பஸ் இயக்கப்பட்டு மறுநாள் காலையில் 3 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு அதே வழித்தடங்களில் அதிகாலை 5 மணிக்கு பொன்னமராவதி வந்தது. இதன் மூலம் சென்னை, கோவை, திருவண்ணாமலை, திருப்பூர் போன்ற வெகு தூரத்தில் பயணிக்கும் மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி பஸ் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் திருச்சி வரும் பயணிகள் அதிகாலை 4.40 மணி வரை காத்து இருக்கும் சூழல் உள்ளதால் மீண்டும் அதே நேரத்தில் அதே வழித்தடங்களில் பஸ் இயக்கவும், கூடுதலாக அதிகாலை 5 மணிக்கு திருச்சியில் இருந்து பொன்னமராவதிக்கு பஸ் இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலவயல்பாலகுறிச்சி, புதுக்கோட்டை.
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வாழ்வார்மங்கலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி நுழைவாயில் அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சச்சிதானந்தம், வாழ்வார்மங்கலம், கரூர்.
Related Tags :
Next Story