பா.ஜனதா ஆலோசனை கூட்டம்


பா.ஜனதா ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 10:43 PM IST (Updated: 10 May 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கட்சியை பலப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

மதுரை, 
தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.
அண்ணாமலை பங்கேற்பு
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மேரியாட் ஓட்டலில்  நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவவிநாயகம், சுதாகர் ரெட்டி, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், துணை தலைவர் ஜெயவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், இளைஞரணி செயலாளர் பாரிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி, அதற்காக என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் எப்படி சேர்க்க வேண்டும்.. வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி ஏற்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
தி.மு.க. அடக்குமுறை
இந்த கூட்டத்திற்கு பின் மூத்த தலைவர் ராம சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியை பொறுத்தவரை மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தனக்கான அணியினை நியமித்து கொள்ளலாம். அதன்படி தற்போது தமிழக பா.ஜனதாவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தை மதுரையில் நடத்தி இருக்கிறோம். மதுரை என்றாலே வெற்றிதான். 
பல அரசியல் கட்சிகள் மதுரையில் இருந்து தங்களது பயணத்தை தொடங்கி உள்ளன. அந்த வகையில் பா.ஜனதாவும் புதிய அணியின் வெற்றி பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கி இருக்கிறோம். பா.ஜனதா கூட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் தி.மு.க. தடையை ஏற்படுத்தி வருகிறது. கொடி கம்பத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கூட்டத்திற்கு மிக தாமதமாக அனுமதி தருகிறார்கள். இது போன்ற இடையூறுகளை ஏற்படுத்தி எங்களை முடக்கி விட முடியாது.
தி.மு.க.வின் அடக்குமுறைக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறார்கள். துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்று ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தார்.அந்த சட்டத்தை 1996-ம் ஆண்டு தி.மு.க. அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. அந்த சமயத்தில் பேசிய பேராசிரியர் க.அன்பழகன், துணை வேந்தர்களை கவர்னர் நியமிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அரசே நியமிக்க வேண்டும் என்பது முட்டாள்தனம், என்றார். க.அன்பழகன் சொன்ன கருத்தைத்தான் தி.மு.க. இப்போது செய்து கொண்டு இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று நிதி அமைச்சர் கூறுகிறார். தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்து விட்டு, இப்போது இல்லை என்கிறார்கள்.
8 கோட்டங்கள்
நீட் விவகாரத்தை பொறுத்தவரை சட்டசபையில் தீர்மானம் இயற்றியது எந்த பலனையும் தராது. மாறாக சுப்ரீம் கோர்ட்டில் தான் தமிழக அரசு முறையிட வேண்டும். ஏனென்றால் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு. 
பெட்ரோல் மட்டுமல்ல மது வகைகளையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். திராவிட மாடல் என்று சொல்லி கொள்ளும் முதல்-அமைச்சர் ஸ்டாலின், கேரளாவில் நடக்கும் ஆட்சி முறைகளை பற்றி தெரிந்து கொண்டு வந்திருக்கிறார். ஆனால் கேரளா அரசோ, குஜராத்தில் நடக்கும் ஆட்சி நிர்வாகத்தை பார்த்து பின்பற்றுகிறார்கள். திராவிட மாடல், ஊழலுக்கானது. மக்களுக்கு எதிரானது. குஜராத் மாடல் வளர்ச்சிக்குரியது. மக்கள் நலனுக்கானது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கில் வெற்றி பெறுவதுதான் பா.ஜனதாவின் இலக்கு. அதில் இரட்டை இலக்கு என்பது 10 தொகுதியில் இருந்து 39 தொகுதிகள் என்று கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம். பா.ஜனதாவின் வளர்ச்சிக்காக ஏற்கனவே 5 கோட்டங்கள், 8 கோட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.. அதன்படி மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், கோவை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story