வேலூரில் கோடை வெப்பத்தை தணித்த சாரல் மழை


வேலூரில் கோடை வெப்பத்தை தணித்த சாரல் மழை
x
தினத்தந்தி 10 May 2022 10:56 PM IST (Updated: 10 May 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர்

வேலூரில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை வெயில்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வேலூர் வாசிகள் தவித்து வந்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்தில் சென்ற பயணிகளும் கடும் சோர்வாகினர். பலர் வியர்வையால் குளித்தனர்.

மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகள், கைபிடிகளும் அனலாக கொதித்தது. வீடுகளில் தரை மற்றும் சுவர்கள் வெப்பமாக, அறைகள் முழுவதும் ஒரே உஷ்ணத்துடன் புழுக்கமாகவே இருந்தது. பைப் குழாய்களில் தண்ணீர் சூடாகவே வந்தது. வீடுகள், அலுவலகங்களில் உள்ள மின் விசிறிகளில் வெப்ப காற்றே வீசியது. கோடை மழை பொழியுமா? என மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர்.

சாரல் மழை

இந்தநிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில்  99.7 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. வேலூரிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மேலாலத்தூரில் 25.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. வேலூரில் 1.2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

 பகலிலும் சாரல் மழை பெய்தது. சாலையில் செல்பவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். பள்ளி மாணவர்களும், பெண்களும் பலர் குடை பிடித்தபடி சென்றனர். மழைகாரணமாக வேலூர் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த சாரல் மழை பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. மேலும் நேற்று இரவில் குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story