கொடைக்கானல் பெரிய மாரியம்மன் வீதிஉலா
சித்திரை திருவிழாவையொட்டி கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் வீதி உலா வந்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா, கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று போலீஸ் துறை சார்பில் மண்டகப்படி நடந்தது. இதையொட்டி அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியுடன் கோவிலில் இருந்து வீதி உலா தொடங்கியது. இதில் நகரசபை தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகரசபை தலைவர் ஸ்ரீதர், கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பாஸ்டீன் தினகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆனந்தகிரி முதல், 2-வது தெருக்களில் அம்மன் பவனி வந்த பிறகு கே.சி.எஸ்.பணியாளர்கள் மண்டகப்படி நடந்தது.
இதைத்தொடர்ந்து டாக்ஸி டிரைவர்கள் மண்டகப்படி, அந்தோணியார் கோவில் தெரு பொதுமக்கள் மண்டகப்படி, ப்ளீஸ்வில்லா பொதுஜன மண்டகப்படி, புனித செபஸ்தியார் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மண்டகப்படிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆனந்தகிரி 1,3,5,6,7-வது தெருக்களில் பெரிய மாரியம்மன் வீதி உலா நடந்தது. பல்வேறு தரப்பினர் சார்பில் மண்டகப்படி நடந்தது. விழாவையொட்டி தினமும் மின் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிகிறார். வருகிற 17-ந்தேதி சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு பூஜை, 18-ந்தேதி தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், பறவைக்காவடி பவனி வருதல் ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் முரளி, செயலாளர் வேலுசாமி, பொருளாளர் ஜெயராமன், கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கத்தினர், இந்து முன்னணியினர் மற்றும் ஆனந்தகிரி இந்து இளைஞர் அணி அமைப்பினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story