497 ஊராட்சிகளிலும் தரிசு நிலங்களில் வேளாண்மை செய்ய வழிவகை கலெக்டர் கவிதாராமு தகவல்


497 ஊராட்சிகளிலும்  தரிசு நிலங்களில் வேளாண்மை செய்ய வழிவகை கலெக்டர் கவிதாராமு தகவல்
x
தினத்தந்தி 10 May 2022 6:05 PM GMT (Updated: 10 May 2022 6:05 PM GMT)

தரிசு நிலங்களில் வேளாண்மை செய்ய வழிவகை செயல்படுத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்களை பயனாளிகளாக கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு நிலத்தினை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டார். பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமினை அவர் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கவிதாராமு தெரிவிக்கையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களில் வேளாண்மை செய்யும் வகையிலும், தரிசு நில உற்பத்தித் திறனை மேம்படுத்திடும் வகையிலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ், தரிசு நில தொகுப்புகளை உருவாக்குதல், தரிசு நில தொகுப்பு நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல், ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு, சூரிய ஒளி பம்பு செட் அமைத்தல், தனிநபர் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், தனிநபருக்கு பண்ணை குட்டை அமைத்தல், சிறுபாசனக் குளம், குட்டை, வரத்துவாரியை தூர்வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது’’ என்றார். அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு ரூ.2,63,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தனலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story