ஆலங்காயம்-காவலூர் சாலையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு


ஆலங்காயம்-காவலூர் சாலையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2022 11:38 PM IST (Updated: 10 May 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம்-காவலூர் சாலையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வாணியம்பாடி

ஆலங்காயத்தை அடுத்த ஆர்.எம்.எஸ்.புதூர் பகுதியிலிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல சாலை, பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

9 அடி அகலமே உள்ள இந்த சாலையில், பயணிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள்  சாலையை அகலப்படுத்தித் தர வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பழைய தார் சாலையை சுரண்டி எடுக்காமலேயே புதிய தார்சாலை அமைக்கப்பட்டதால் சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயர்ந்து விட்டது. 

இந்த சாலையில் எதிரெதிரே வாகனங்கள் ஒன்றை ஒன்று கடக்கும்போது விபத்துகள் ஏற்படுவதாக கூறி 
மலைகிராம மக்கள் 2 முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலையை அகலப்படுத்துவதற்கு தேவையான நிலத்தை வழங்க வனத்துறையிடம் முறையாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நேற்று சம்பந்தப்பட்ட இடத்தை வேலூர் மண்டல வனபாதுகாவலர் சுஜாதா, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது, நெடுஞ்சாலை துறையினரிடம் சாலையின் இருபுறங்களிலும் எவ்வாறு அகலப்படுத்தப்பட உள்ளது, மழை பெய்யும்போது சாலையில் தண்ணீர் தேங்காமல் வெளியேற எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நெடுஞ்சாலைத்துறையினர் பழைய சாலையை சுரண்டி எடுக்காமலேயே புதிய தார்சாலை அமைக்க அனுமதித்ததற்கு என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஜாலா, ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் உள்ளிட்ட பல முக்கிய வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story