கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19756 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,756 மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 1,764 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தமிழ் தேர்வுடன் தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 123 பள்ளிகளில் இருந்து 73 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 10,861 மாணவர்கள், 10,659 மாணவிகள் என மொத்தம் 21,520 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
பொதுத்தேர்வு எழுத நேற்று காலை 9 மணிக்கெல்லாம் மாணவ- மாணவிகள் அந்தந்த தேர்வு மையத்திற்கு வந்தனர்.
சரியாக காலை 10 மணிக்கு மாணவ- மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. வினாத்தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை படித்து பார்ப்பதற்காக கூடுதலாக 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டவுடன் அதில் மாணவ- மாணவிகள் தங்களது பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடம் ஒதுக்கப்பட்டு 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது.
பறக்கும் படையினர் கண்காணிப்பு
காலை 10.15 மணியில் இருந்து பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 9,926 மாணவர்கள், 9,830 மாணவிகள் என மொத்தம் 19,756 பேர் எழுதினர். 935 மாணவர்கள், 829 மாணவிகள் பேர் என மொத்தம் 1,764 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வில் மாணவர்கள் ஆள் மாறாட்டம், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பியடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story