மின்சாரம் பாய்ந்து காவலாளி - பெயிண்டர் பலி


மின்சாரம் பாய்ந்து காவலாளி - பெயிண்டர் பலி
x
தினத்தந்தி 11 May 2022 12:54 AM IST (Updated: 11 May 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

பதாகையை தூக்கியபோது மின்மாற்றியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து காவலாளி, பெயிண்டர் ஆகியோர் பலியானார்கள்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 42), இவர் திருச்சி அருகே நெ.1டோல்கேட், மேனகா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு நெ.1 டோல்கேட் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் கட்டுமான பணி நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை கீழே சாய்ந்து கிடந்தது.  
மின்சாரம் பாய்ந்தது
இந்நிலையில் நேற்று, காவல் பணிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த விளம்பர பதாகை கீழே விழுந்து கிடந்ததை செல்லத்துரை பார்த்தார். இதனைத்தொடர்ந்துஅவர்கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க வந்த வாத்தலை அருகே உள்ள சென்னகரை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் சேட்டு (36), விமல்நாத் (28) ஆகியோரது உதவியுடன் விளம்பர பதாகையை தூக்கி நிறுத்த முயன்றார்.
அப்போது, அந்த பதாகை கட்டிடத்தின் அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின்மாற்றியின் மீது உரசியது. இதனால் விளம்பர பதாகையை பிடித்துக்கொண்டிருந்த சேட்டு, செல்லத்துரை ஆகிய 2 பேரின் உடலில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். விமல்நாத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
2 பேர் பலி
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் செல்லத்துரையை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கும், சேட்டுவை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் 2 பேரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
உரிமையாளர் மீது வழக்கு
விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியின் விளம்பரத்திற்காக மின்மாற்றியின் அருகே உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை தூக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததின் காரணமாக 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கமருதீன் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story