இணையவழி குற்றங்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்


இணையவழி குற்றங்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2022 8:02 PM GMT (Updated: 10 May 2022 8:02 PM GMT)

இணையவழி குற்றங்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி அறிவுறுத்தினார்.

பெரம்பலூர்:

செல்போன்கள் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் செல்போன்கள் காணாமல் போனது மற்றும் மோசடி தொடர்பான புகார்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு சார்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வி.பி.கணேசன் தலைமையில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளில் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது.

இதில் காணாமல் போன ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 20 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்து 99 மதிப்பிலான பணம், உடைமைகள் மீட்கப்பட்டது. இதையடுத்து அவற்றை திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்படி திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் அறிவுரையின்படி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி, செல்போன்களையும், ரூ.4 லட்சத்து 24 ஆயிரத்து 186 ரொக்கத்தையும் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

புகார் தெரிவிக்க வேண்டும்

அப்போது அவர் கூறியதாவது;-

பெரம்பலூர் மாவட்டத்தில் இணைய வழி குற்றங்கள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக இணையவழி பண மோசடி புகார்களுக்கு 1930 என்ற இலவச எண்ணிற்கு 24 மணி நேரத்திற்குள் அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் தொடர்பாக இணையதளத்தில் புகார் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு, நகைப்பறிப்பு, வழிப்பறி, கொள்ளைச்சம்பவங்கள், வாகனத்திருட்டுகள் அடிக்கடி நடப்பதற்கு பொதுமக்களின் கவனக்குறைவு பிரதான காரணமாகும்.

தங்களது நகைகள், உடைமைகளை வங்கி லாக்கர்களில் வைத்துக்கொண்டால் உடைமைகள் திருட்டு போவதை தவிர்க்க முடியும். பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள போலீசாரை கொண்டு திருட்டு குற்றங்களை துப்பு துலக்கி வருகிறோம். பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்கவும், அதிக எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்கவும் தமிழக அரசிற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி விரைவில் கூடுதல் போலீஸ் நிலையம் பெரம்பலூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை

பெரம்பலூரில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், தகவல் தெரிவித்தவரின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்பட்டு, கஞ்சா விற்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியபிரகாசம், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story