கும்பகோணத்தில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்


கும்பகோணத்தில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 8:33 PM GMT (Updated: 10 May 2022 8:33 PM GMT)

கச்சா பட்டின் விலையை குறைக்கக்கோரி கும்பகோணத்தில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

கும்பகோணம்
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பட்டு நெசவுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டு சேலை நெய்வதற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து, தறியில் நெய்து சேலைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். 
இந்தநிலையில், பட்டுச்சேலை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான கோரா பட்டின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பட்டு நெசவு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கோரா பட்டின் விலை ரூ.3 ஆயிரத்து 200-ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.
கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
 கடுமையான விலை உயர்வினால் இந்த தொழிலை நம்பியுள்ள நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் கோரா பட்டின் விலை உயர்வை குறைத்து நெசவுத்தொழிலை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் பகுதியில் உள்ள பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் அமைப்புகள் சார்பில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலையில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில், கும்பகோணம் மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வம், அனந்தராமன் மற்றும் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story