தாளவாடி, அந்தியூர், கோபி பகுதியில் கொட்டி தீர்த்த மழை


தாளவாடி, அந்தியூர், கோபி பகுதியில் கொட்டி தீர்த்த மழை
x
தினத்தந்தி 10 May 2022 8:56 PM GMT (Updated: 10 May 2022 8:56 PM GMT)

தாளவாடி, அந்தியூர், கோபியில் கொட்டி தீர்த்த மழையால் மாணவர்கள்- பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஈரோடு
தாளவாடி, அந்தியூர், கோபியில் கொட்டி தீர்த்த மழையால் மாணவர்கள்- பொதுமக்கள் அவதிப்பட்டனர். 
பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வப்போது இரவு நேரங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வந்தாலும், பகலில் வெயிலின் உக்கிரம் குறைந்தபாடில்லை. 
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள தாளவாடியில் பகலில் வெயில் வாட்டி வந்தாலும், அவ்வப்போது இரவில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென பலத்த மழை தொடங்கியது. இந்த மழை 8 மணி வரை கொட்டி தீர்த்தது. 
2 மணி நேரம்
இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் கிராம பகுதிகளில் இருந்து தாளவாடிக்கு வரும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் மற்றும் தாளவாடியில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதேபோல் கூலித்தொழில், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். 
பின்னர் தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் மீண்டும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
அந்தியூர்
இதேபோல் அந்தியூர், நகலூர், பெருமாபாளையம், கொண்டையம்பாளையம், சின்னத்தம்பிபாளையம் உள்பட அந்தியூரில் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் மாலை 5 மணி முதல் 5.30 மணி பலத்த மழை பெய்தது.  இதனால் வெயிலின் தாக்கம் குளிர்ந்த காற்று வீசியது. 
கோபி
கோபி, மொடச்சூர், நல்லகவுண்டன்பாளையம், கலிங்கியம், கரட்டூர் வேட்டைக்காரன் கோயில், பாரியூர், கவுண்டன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6½ மணி அளவில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ந்த காற்று வீசியது.

Related Tags :
Next Story