சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 39 ஆயிரத்து 232 மாணவ- மாணவிகள் எழுதினர் 2,846 பேர் எழுதவில்லை


சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 39 ஆயிரத்து 232 மாணவ- மாணவிகள் எழுதினர் 2,846 பேர் எழுதவில்லை
x
தினத்தந்தி 11 May 2022 2:32 AM IST (Updated: 11 May 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 39 ஆயிரத்து 232 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வை 2,846 பேர் எழுத வரவில்லை.

சேலம்,
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் இந்த பொதுத்தேர்வு 149 மையங்களில் தொடங்கியது. இதற்காக மாணவ, மாணவிகள் காலை 7.30 மணி முதலே பள்ளிக்கு வரத்தொடங்கினர். பள்ளிக்கு புறப்படுவதற்கு முன்பாக பல மாணவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது. 
பிளஸ்-1 பொதுத்தேர்வையொட்டி ஒவ்வொரு பள்ளியிலும் கரும்பலகை வைக்கப்பட்டு அதில் பதிவு எண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும் அறை எவை, எவை? என வெள்ளைத்தாளில் எழுதி ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதனை மாணவ, மாணவிகள் பார்த்துவிட்டு தங்களுடைய தேர்வு அறைக்கு சென்றனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுதும் மாணவர்களை அழைத்து சில அறிவுரைகளை வழங்கினர்.
39 ஆயிரம் பேர் எழுதினர்
அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்கு சென்றவுடன் காலை 10 மணிக்கு தேர்வுக்கான கேள்வித்தாள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 42 ஆயிரத்து 78 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த தமிழ் முதல் தாள் தேர்வை 19 ஆயிரத்து 52 மாணவர்கள், 20 ஆயிரத்து 180 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 232 பேர் எழுதினர். 2 ஆயிரத்து 846 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் 401 ஆசிரியர்கள் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தேர்வு மையங்களில் ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும் 42 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 30 வழித்தட அலுவலர்கள், 164 முதன்மை கண்காணிப்பாளர்கள், 164 துறை அலுவலர்கள், 2,150 அறை கண்காணிப்பாளர்கள், 390 சொல்வதை எழுதுபவர், 201 நிலையான படையினர், 372 ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


Next Story