தாம்பரத்தில் 9 ஏக்கரில் போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்கீடு


தாம்பரத்தில் 9 ஏக்கரில் போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 11 May 2022 4:09 PM IST (Updated: 11 May 2022 4:09 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் 9 ஏக்கரில் போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ள‌ நிலத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

தாம்பரம்,  

சென்னை புறநகர் பகுதியில் தாம்பரம் போலீஸ் ஆணையரகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலக கட்டிடம் தற்போது சோழிங்கநல்லூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதேபோல புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் பழைய தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் சித்த மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனை இடங்களுக்கு நடுவே 5 ஏக்கர் நிலத்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகமும், 4.3 ஏக்கர் நிலத்தில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகமும் கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ள‌ நிலத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மருத்துவ துறை இயக்குனர் நாராயண பாபு, காசநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், தாம்பரம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலத் தலைவர் டி.காமராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசும்போது,

குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி மாவட்ட மருத்துவமனையாகவும், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகவும் மாற்ற ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Next Story