மீண்டும் அதிகரித்து வரும் பிளக்ஸ் கலாசாரம்


மீண்டும் அதிகரித்து வரும் பிளக்ஸ் கலாசாரம்
x
தினத்தந்தி 11 May 2022 4:30 PM IST (Updated: 11 May 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

மீண்டும் அதிகரித்து வரும் பிளக்ஸ் கலாசாரம்

அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாநகரில் பிளக்ஸ் கலாச்சாரம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பெரிய விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிளக்ஸ் 
தொழில் நகரமான திருப்பூரில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் சாலை வசதிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கிடையே அரசியல் கட்சிகள் தொடர்பான பதாகைகள், திறப்பு விழா, கோவில் விழாக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், கண்ணீர் அஞ்சலி, மற்றும் பொது நிகழ்ச்சிகள் தொடர்பான பிளக்ஸ் மற்றும் விளம்பர பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாக வைப்பது வாடிக்கையாக இருந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் கோவையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பதாகை சாலையில் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. 
இதையடுத்து பிளக்ஸ் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் உரிய அனுமதி பெற்று நிகழ்ச்சிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் அனுமதி இல்லாமல் பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் சாலையோரம் பிளக்ஸ் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவது வெகுவாக குறைந்தது. மேலும் அனுமதி பெற்று வைக்கப்பட்ட பிளக்ஸ்களில் போலீஸ் அனுமதி பெற்றது என்ற வாசகமும் இடம் பெற்றது. 
நடவடிக்கை எடுக்கப்படுமா
இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாநகரில் பிளக்ஸ் கலாசாரம் மீண்டும் அதிகரித்து வருகிறது. திருப்பூரின் முக்கிய சாலைகளில் சாலையோரம் கோவில் விழாக்கள், திறப்பு விழா, பொது நிகழ்ச்சிகள் மற்றும் கண்ணீர் அஞ்சலி தொடர்பான பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவினாசி ரோடு பெரியார்காலனி பஸ் நிறுத்தம் அருகே ஒரே இடத்தில் 6 பிளக்ஸ்கள் சாலையோரம் உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருப்பூர் மாநகரில் இதுபோன்ற பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சாய்ந்து கீழே விழும் நிலையில் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தாகவும் அமைந்துள்ளது.  திருப்பூரில் பெரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ள பிளக்ஸ் கலாச்சாரத்திற்கு காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
----------------

Next Story