நில இழப்பீடு தொகை மோசடி 17 பேர் கைது- தாசில்தாருக்கு வலைவீச்சு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 May 2022 4:49 PM IST (Updated: 11 May 2022 4:49 PM IST)
t-max-icont-min-icon

போலி வாரிசு சான்று மூலம், நில இழப்பீடு தொகை மோசடியில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த தாசில்தாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தானே, 
  போலி வாரிசு சான்று மூலம், நில இழப்பீடு தொகை மோசடியில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த தாசில்தாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விரிவாக்கம் பணி
  தானே மாவட்டம் பிவண்டி பகுதியில், குஜராத் வதோரா செல்லும் நெடுஞ்சாலைக்கான சாலை விரிவாக்கம் பணி, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் நிலத்தை இழந்த விவசாயிகள் இழப்பீடு பெற, கோட்ட அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 
  இதன்படி பிவண்டி தாலுகா நந்திதானே கிராமத்தை சேர்ந்த நாராயண் போயர், தனக்கு சொந்தமான 17 ஆயிரத்து 824 சதுர மீட்டர் நிலத்திற்கான இழப்பீட்டை பெற விண்ணப்பித்து இருந்தார்.
தொகை மாற்றம்
  இதற்கிடையில் நாராயண் போயர் உயிரிழந்தார். இதனால், குடும்ப உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு வாரிசு சான்றிதழுடன், பெண்கள் உள்பட 9 பேர் நிலத்தின் இழப்பீட்டு தொகையை பெற தாலுகா அலுவலகத்தை அணுகினர்.
  ஆவண சரிபார்ப்புக்கு பின்னர் அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொண்டு, அவர்களது வங்கி கணக்கில் தொகை மாற்றப்பட்டது.
போலீசில் புகார்
  இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாராயண் போயரின் உண்மையான வாரிசுகளான வினித் போயர், அமோல் போயர், ஹரேஷ் போயர் ஆகிய 3 பேர் தானே தாலுகா அதிகாரியிடம் முறையிட்டனர். இவர்கள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்தபோது, இதற்கு முன்பு வாரிசுதாரர்கள் என போலி ஆவணங்களை சமர்பித்து 9 பேர் இழப்பீடு தொகையை பெற்று சென்றது தெரியவந்தது.
   இதுபற்றி சாந்தி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 
 17 பேர் கைது
  புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தாசில்தார் வித்தல் கோசாவி, ஏஜெண்ட் மனிஷா பகாரே ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மேலும் போலி ஆவணங்களை வக்கீல் பிரவின் சவுத்ரி என்பவர் தயாரித்து உதவி செய்தது தெரியவந்தது. 
  இதையடுத்து போலீசார் தாசில்தார் உள்பட 18 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, 17 பேரை கைது செய்தனர். இதில் தாசில்தார் தலைமறைவாகி விட்டதால், அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story