மாதவரம், பூந்தமல்லியில் மெட்ரோ ரெயில் பணிமனை கட்டும் பணி தொடக்கம்


மாதவரம், பூந்தமல்லியில் மெட்ரோ ரெயில் பணிமனை கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 11 May 2022 1:27 PM GMT (Updated: 11 May 2022 1:27 PM GMT)

மாதவரம், பூந்தமல்லியில் மெட்ரோ ரெயிலுக்கான பணிமனை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 55 கி.மீ. தூரத்துக்கு ரெயில்களை இயக்கி வருகிறது. சராசரியாக தினமும் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் 118.9 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் வருகிற 2026-ம் ஆண்டு ரெயில்களை இயக்குவதற்காக மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் பகுதிபகுதியாக தீவிரமாக நடந்து வருகிறது.

முதல்கட்டத்தில் இயக்கப்படும் 52 ரெயில்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பணிமனை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. போதுமான இடவசதி இல்லாததால் திருவொற்றியூர் விம்கோ நகரில் உயர்த்தப்பட்ட பாதையில் ராட்சத தூண்கள் உதவியுடன் புதிய பணிமனை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் 3 வழித்தடங்களில் நடக்கும் 2-வது கட்டப்பணிகள் வருகிற 2026-ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. அதற்கு பிறகு 3 வழித்தடத்திலும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. 2-வது கட்டத்தில் டிரைவர்கள் இல்லாத ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இதனால் ரெயில் பணிமனை மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் கூடுதலாக தேவைப்படும் என்பதால் மெட்ரோ ரெயில் நிறுவனம் கோயம்பேடு மற்றும் திருவொற்றியூர் விம்கோ நகர் பணிமனையை தொடர்ந்து, பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் புதிதாக பணிமனைகளை கட்ட முடிவு செய்தது.

பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் பணிமனை கட்டப்படும் இடத்தில் நில அளவீடு உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் நிறைவடைந்து தற்போது கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 15 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. டிரைவர் இல்லாத ரெயிலை இயக்கும் கட்டுப்பாட்டு மையமும் இந்த பணிமனையில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சிறுசேரி சிப்காட் பகுதியில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ரெயில்கள் நிறுத்தும் இடம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை அமைக்கப்படும் 4-வது வழித்தடத்தில், முதல்கட்டமாக கோயம்பேடு பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உள்ள பாதையில் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முழுவதுமாக கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை ரெயில்கள் இயக்கப்படும். இந்தப்பாதையில் 26 ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உ்ள்ளது. இதற்கு முன்பாக பூந்தமல்லியில் ரெயில் பணிமனை அமைக்கப்பட உள்ளது. தற்போது இயக்கப்படும் 4 பெட்டிகளை கொண்ட ரெயில் போன்று இல்லாமல், 2-வது கட்டத்தில் இயக்கப்படும் பாதையில் 3 பெட்டிகளை கொண்ட டிரைவர் இல்லாத ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story