மாவட்ட செய்திகள்

கேரள-நீலகிரி எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா? + "||" + Will surveillance be intensified on the Kerala-Nilgiris border

கேரள-நீலகிரி எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

கேரள-நீலகிரி எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
தக்காளி வைரஸ் பரவல் எதிரொலியாக கேரள-நீலகிரி எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊட்டி

தக்காளி வைரஸ் பரவல் எதிரொலியாக கேரள-நீலகிரி எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

தக்காளி வைரஸ்

கேரளாவில் கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சலும் பரவி வந்தது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், தக்காளி வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது குழந்தைகளை குறிவைத்து தாக்கி வருவதால், பீதி அடைந்து உள்ளனர். 

கேரளாவை ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்து உள்ளதால், அங்கிருந்து தினமும் ஏராளமானோர் பணி உள்பட பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். தொடுதலின் மூலம் இந்த நோய் பரவும் என்பதால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வருபவர்களை பரிசோதனை செய்ய கோவை வாளையாறு உள்பட பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

நீலகிரிக்கு பரவும் அபாயம்

இதற்கிடையே வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உள்பட கேரளா முழுவதும் இருந்து குழந்தைகளுடன் ஆயிரக்கணக்கானோர் கார் உள்பட பல்வேறு வாகனங்கள் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர். எனவே அவர்கள் மூலம் நீலகிரியில் தக்காளி வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:- தக்காளி வைரஸ் அனைத்து வயதினருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தக்காளி போன்ற கொப்பளம் ஏற்படும். இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு அதிகரிப்பு

குறிப்பாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற அறிகுறிகளுடன் யாராவது சிகிச்சைக்கு வந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

ஆனாலும் நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் வைரஸ் பரவலின் தீவிரத்தை பொறுத்து சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.