‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
தினத்தந்திக்கு நன்றி
தேனி வயல்பட்டியில் தெருவிளக்கு எரியவில்லை என்று தினத்தந்தியின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தெருவிளக்கை சரிசெய்து எரிய வைத்தனர். இதற்காக தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். -குமார், வயல்பட்டி.
கம்பியில் தொங்கும் மின்கம்பம்
வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் கன்னிமார்கோவில் அருகே ஒரு மின்கம்பத்தின் மேல்பகுதி கடந்த வாரம் வீசிய சூறாவளி காற்றில் முறிந்து விட்டது. அவ்வாறு முறிந்த மின்கம்பத்தின் மேல்பகுதி மின்கம்பியில் தொங்கி கொண்டிருக்கிறது. மக்கள் நடமாடும் பகுதி என்பதோடு, கால்நடைகளும் மேய்ச்சலுக்கு வரும் இடமாக உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
-பாக்கியராஜ், வத்தலக்குண்டு.
வரி ரசீதில் திருத்தம் செய்ய முகாம்
திண்டுக்கல் மாநகராட்சியில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் ரசீதில் பலருடைய பெயர் தவறுதலாக உள்ளது. எனவே வரி ரசீதில் திருத்தம் செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சின்னமனூர் அருகே சின்னஒபுளாபுரத்தில் சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதில் கழிவுகளும் கொட்டப்படுவதால், மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஈ, கொசுக்கள் தொல்லையும் அதிகரித்து விட்டது. பொதுமக்களின் நலன்கருதி குப்பைகளை அகற்ற வேண்டும்.
-ரவி, அப்பிபட்டி.
போக்குவரத்து நெரிசல்
தேனி க.விலக்கு சந்திப்பில் சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
-நந்தகோபால், ஆண்டிப்பட்டி.
திறக்க முடியாத பஸ் ஜன்னல் கண்ணாடி
திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்கு செல்லும் 6-பி டவுன் பஸ்சில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் திறக்க முடியாதபடி உள்ளது. இதனால் அந்த பஸ்சில் பயணிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் கண்ணாடியில் உள்ள பழுதை சீரமைக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிசாமி, கன்னிவாடி.
Related Tags :
Next Story