‘உம்ரா யாத்திரைக்காக’ சவுதி அரேபியா சென்ற மாணவி முஸ்கான்


‘உம்ரா யாத்திரைக்காக’ சவுதி அரேபியா சென்ற மாணவி முஸ்கான்
x
தினத்தந்தி 11 May 2022 4:04 PM GMT (Updated: 11 May 2022 4:04 PM GMT)

உம்ரா யாத்திரைக்காக மகள் முஸ்கான் மற்றும் குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவுக்கு வந்துள்ளதாக அவரது தந்தை முகமது உசேன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


மண்டியா:

ஹிஜாப் போராட்டம்

  கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டபோது, அதை எதிர்த்து ஏராளமான முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். 

அப்போது மண்டியாவில் உள்ள தனியார் பி.யூ கல்லூரியில் இந்து மாணவர்களுக்கு போட்டியாக ‘‘அல்லா கூ அக்பர்’’ என்று கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் மாணவி முஸ்கான்.
  இவரது இந்த வீடியோ உலக அளவில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  மேலும் மாணவி முஸ்கானின் தைரியத்தை பாராட்டி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினர். இது தவிர அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரும் முஸ்கானின் செயலை பாராட்டினார்.

  இதனால் முஸ்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கும் என்று சந்தேகம் எழுந்தது. சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென்று பா.ஜனதா கட்சியினர் கூறி வந்தனர்.

சவுதி அரேபியா பயணம்

  இந்நிலையில் முஸ்கான் தனது குடும்பத்தினருடன் ‘‘உம்ரா யாத்திரைக்காக’’சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி சவுதி அரேபியாவிற்கு குடும்பதுடன் சென்ற முஸ்கான் வருகிற 18-ந் தேதிதான் மண்டியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் முஸ்கானின் தந்தை முகமது உசேன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:-

மன அமைதி நிலவவேண்டும்

  உம்ரா யாத்திரைக்காக மகள் முஸ்கான் மற்றும் குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவுக்கு வந்துள்ளேன். மண்டியாவில் உள்ள ஒவ்வொருவரும் எனது சகோதர, சகோதரிகள். உங்கள் அனைவரையும் அல்லா ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். 

இதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன். அனைவருக்கும் நல்லது நடக்கட்டும். மண்டியா மட்டுமின்றி இந்தியாவிலும் மக்கள் அனைவரும் சந்தோஷம், சமாதானம், மன அமைதியுடன் இருக்க வேண்டும் என்று இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று உங்கள் ஆசீர்வாதமும் எங்கள் மீது இருக்கவேண்டுகிறேன். இறைவன் அனைவருக்கும் சுகப்பலன் தந்து ஆரோக்கியத்துடன் வைக்கவேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story