கர்நாடக மந்திரி சபை மாற்றம் குறித்து அமித்ஷாவுடன் பசவராஜ்பொம்மை ஆலோசனை


கர்நாடக மந்திரி சபை மாற்றம் குறித்து அமித்ஷாவுடன் பசவராஜ்பொம்மை ஆலோசனை
x
தினத்தந்தி 11 May 2022 4:11 PM GMT (Updated: 11 May 2022 4:11 PM GMT)

கர்நாடக மந்திரிசபை மாற்றம் குறித்து டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் பசவராஜ்பொம்மை கூறுகையில், 3 நாளில் மந்திரிசபை விரிவாக்கம் பற்றி அறிவிக்கப்படும் என்றார்.

பெங்களூரு: கர்நாடக மந்திரிசபை மாற்றம் குறித்து டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் பசவராஜ்பொம்மை கூறுகையில், 3 நாளில் மந்திரிசபை விரிவாக்கம் பற்றி அறிவிக்கப்படும் என்றார். 

முதலீட்டாளர்கள் மாநாடு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரிசபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. அத்துடன் சில மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும் பேசப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 3-ந் தேதி பெங்களூரு வந்திருந்தார். அப்போது மந்திரிசபை மாற்றத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தான் டெல்லி சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு தகவல் தெரிவிப்பதாக அமித்ஷா கூறியதாக பசவராஜ் பொம்மை கூறினார். இதற்கிடையே முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 6-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, அடுத்த 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று கூறினார்.

ஆனால் மந்திரிசபை மாற்றம் குறித்து விவாதிக்க கட்சி மேலிடம் அழைப்பு விடுக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காத்திருந்தார். ஆனால் பா.ஜனதா மேலிடம் அவருக்கு அழைப்பு விடுக்கவே இல்லை. இதற்கிடையே முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக டெல்லியில் வெளிநாடுகளின் தூதர்கள் கூட்டம் கர்நாடக தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 அதில் கலந்து கொள்வதற்காக பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு முதல் நாளில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு பெங்களூருவில் நவம்பர் மாதம் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தூதர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மாநிலங்களவை தேர்தல்

அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பசவராஜ் பொம்மை, ‘மந்திரிசபை மாற்றம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கவில்லை’ என்று கூறினார். ஆனால் திடீர் திருப்பமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மந்திரிசபை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து மந்திரிசபை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தினேன். மந்திரிசபை மாற்றம் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் கர்நாடக மேல்-சபை, மாநிலங்களவை தோ்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மந்திரிசபை மாற்றம் குறித்து கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசித்து 2, 3 நாட்களில் தகவல் தெரிவிப்பதாக அமித்ஷா கூறினார்.

அரசியல் சூழ்நிலைகள்

யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கவில்லை. ஒருவேளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதாக இருந்தால், அதனால் ஏற்படும் சாதக-பாதகங்கள் குறித்தும் அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளேன். மந்திரிசபை மாற்றத்தின்போது அதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் அடுத்து 2, 3 நாட்களில் இது தொடர்பாக எந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்த்துவிட்டு அதன் பிறகு மந்திரிசபை மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கலாம் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

மாநிலங்களவை, கர்நாடக மேல்-சபை மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். கர்நாடகத்தில் மந்திரிசபை மாற்றமா? அல்லது விரிவாக்கமா? என்பது குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் என்ன என்பதையும் நான் தெளிவாக எடுத்து கூறியுள்ளேன். மந்திரிசபையை மாற்றி அமைக்கும்போது, ஒரு அரசியல் கட்சியாக அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story