அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வி உதவித்தொகை வழங்காத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைமூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதன் விவரம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது
குறித்து ஆய்வு செய்ததுடன் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவ- மாணவிகள் சில ஆண்டுகளாக தங்களுக்கு கல்வி உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை என புகார் தெரிவித்ததையொட்டி புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரிடம் கல்வி உதவித்தொகை வழங்காததன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த கல்வியாண்டிலேயே உரிய கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும் உரிய காலத்தில் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய விளக்கம் கோர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
எச்சரிக்கை
மேலும் கலெக்டர் மோகன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சரியாக மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கிறதா என்பதை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை,
பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும். காலதாமதம் ஏற்படுவது அறிந்தால் துறை அதிகாரிகள் மூலம் அந்த பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளை ஆய்வு செய்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரியாக வழங்கப்படுகிறதா என்று உறுதி செய்து கொள்வதுடன் சரியாக கல்வி உதவித்தொகை வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ரகுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெற்றோரை இழந்து கல்வி கற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு உதவித்தொகை குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆதிதமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.