பிரம்மோற்சவ விழா: கூவம் திரிபுராந்தக சாமி கோவிலில் தேரோட்டம்


பிரம்மோற்சவ விழா: கூவம் திரிபுராந்தக சாமி கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 10:07 PM IST (Updated: 11 May 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

பிரம்மோற்சவ விழாவையொட்டி கூவம் திரிபுராந்தக சாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சாமி கோவில் உள்ளது. இங்கு சாமியை அர்ச்சகர்கள் பூஜை செய்யும் போது கூட அர்ச்சகர்கள் சாமி சிலையை தொடாமல் அர்ச்சனை செய்வதால் தீண்டா திருமேனியர் என்ற பெயரும் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம், பூத வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம் என பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

அப்போது வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட திருத்தேரில் திரிபுரசுந்தரி அம்மாளுடன் திருபுராந்தகசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து தேரானது முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா புறப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் டில்லிபாபு முதலியார் மற்றும் விழாக்குழுவினர், கூவம் கிராம பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய நாகபூண்டி கிராமத்தில் நாகவள்ளி அம்மன் சமேத நாகேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா இந்த மாதம் 3-ந்தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. மறுநாள் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு நாகவல்லி அம்மன் சமேத நாகேஸ்வரசுவாமி தினந்தோறும் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம் போன்றவற்றில் ஊர்வலம் நடைபெற்றது.

நேற்று காலை நாகவள்ளி அம்மன் சமேத நாகேஸ்வர சாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நாகேஸ்வரசாமி, நாகவள்ளி அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story