அதிக சத்தம் எழுப்பக்கூடிய வகையில் உள்ள ஏர்ஹாரன்களை உடனடியாக அகற்ற வேண்டும் பஸ், லாரி உரிமையாளர்களுக்கு அதிகாரி உத்தரவு


அதிக சத்தம் எழுப்பக்கூடிய வகையில் உள்ள ஏர்ஹாரன்களை உடனடியாக அகற்ற வேண்டும் பஸ், லாரி உரிமையாளர்களுக்கு அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2022 4:45 PM GMT (Updated: 2022-05-11T22:15:15+05:30)

அதிக சத்தம் எழுப்பக்கூடிய வகையில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏர்ஹாரன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பஸ், லாரி உரிமையாளர்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் உத்தரவிட்டார்.


விழுப்புரம்,

விழுப்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை அகற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏர்ஹாரன்களை அகற்ற

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடும் வகையில் விபத்து ஏற்படுத்தாமலும் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும் வாகனங்களை இயக்குதல் வேண்டும், 

சீருடை அணிந்து வாகனங்களை இயக்குதல் வேண்டும், அதிவேகமாக வாகனங்களை இயக்குதல் கூடாது, பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது. 

மேலும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வகையில் பொருத்தப்பட்டிருக்கும் ஏர்ஹாரன்களை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும். தவறினால் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் கங்காதரன், அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (தொழில்நுட்பம்) செல்வக்குமார், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story