தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி


தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி
x
தினத்தந்தி 11 May 2022 4:52 PM GMT (Updated: 2022-05-11T22:22:10+05:30)

திண்டுக்கல்லில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்ப்புலிகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்: 

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டு தமிழ்ப்புலிகள் சார்பில் மனுவும் கொடுக்கப்பட்டது.  ஆனால் போலீசார், தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருவாணன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன் மற்றும் நிர்வாகிகள் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்தனர். 

முன்னதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே கலைந்து சென்றுவிடுங்கள் என்று கூறினர். ஆனால் அதனை ஏற்காத தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். 

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சியை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டபடியே அவர்கள் வேனில் ஏறினர்.


Next Story