கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல சாலை வசதி


கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல சாலை வசதி
x
தினத்தந்தி 11 May 2022 4:54 PM GMT (Updated: 11 May 2022 4:54 PM GMT)

வால்பாறை அருகே வனப்பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வால்பாறை

நிலச்சரிவால் பாதிப்பு 

வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட்டை ஒட்டி உள்ள வனப்பகுதிக்குள் கல்லார் மலைவாழ் கிராமம் உள்ளது. இங்கு 21 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு வால்பாறையில் பெய்த கனமழை காரணமாக கல்லார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குடியிருப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டது. 

இதனால் மலைவாழ் மக்கள் பூர்வீக இடத்தில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அதே வனப்பகுதியில் தெப்பக்குளமேடு என்ற இடத்தில் தற்காலிக வீடுகள் அமைத்து இடம் பெயர்ந்தனர். ஆனால், ஆனைமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிக்குள் குடியிருப்பு அமைப்பதற்கு மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து  கல்லார் மலைவாழ் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். 

சாலை வசதி 

இந்த நிலையில் அவர்களுக்கு  தெப்பக்குளமேட்டில் வன உரிமை பட்டா அடிப்படையில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியதுடன், பட்டா வழங்கவும் கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 

வீடுகள் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை சரக்கு வாகனங்களில்  தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட வழியாக மட்டும் கொண்டு செல்ல முடியும். இதனால் கட்டுமான பொருட்களை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.  பின்னர் எஸ்டேட் நிர்வாகம் தேயிலை செடிகளை அகற்றி சாலை வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்ைக விடுத்தனர். 

அதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில், தேயிலை செடிகளை அகற்றி தெப்பக்குளமேடு பகுதி வரை சிறிய வாகனங்கள் செல்லும் வகையில் மண் சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதன் மூலம் கட்டுமான பொருட்களை கொண்டு சென்று பூர்விக இடத்தில் வீடுகள் கட்டுவதற்கு தீர்வு ஏற்பட்டு உள்ளதால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story