ஜிட்டப்பல்லி கிராமத்தில் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சி ஜிட்டப்பல்லி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. குடியாத்தம் தாசில்தார் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் உத்திரகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினர் பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமுடு, துணைத் தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் தேவி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் வெங்கட்ராமன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், ஒன்றியக் குழுத்தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து 57 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், சலவை பெட்டி, வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண் கருவிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் முரளிதரன், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன், குபேந்திரன், ஊராட்சி மன்ற செயலாளர் கோட்டீஸ்வரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.