தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பு: ரசாயன நுரையால் சூழப்பட்ட கெலவரப்பள்ளி அணை
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், கெலவரப்பள்ளி அணை ரசாயன நுரையால் சூழப்பட்டுள்ளது.
ஓசூர்:
கெலவரப்பள்ளி அணை
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை உள்ளது. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் தற்போது அதிகளவில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. மேலும் பெங்களூரு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும் கலக்கப்படுகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் நிறம் பச்சையாக மாறியுள்ளது.
இந்தநிலையில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சிலர் தங்களது தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கலந்து வருகிறார்கள்.
ரசாயன நுரை
இதனால் கெலவரப்பள்ளி அணை ரசாயன நுரையால் சூழப்பட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீரே தெரியாத அளவுக்கு ரசாயன நுரை தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தண்ணீரில் காணப்படும் கழிவுகள் மற்றும் ரசாயன நுரையால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 640 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
Related Tags :
Next Story