வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி


வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி
x
தினத்தந்தி 11 May 2022 5:04 PM GMT (Updated: 11 May 2022 5:04 PM GMT)

தமிழகத்தில் முதல் முறையாக வால்பாறையில் கூண்டு அமைத்து வருகிற 16-ந் தேதி முதல் புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை

புலிக்குட்டி மீட்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட முடீஸ் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு ஒரு புலிக்குட்டி உடல் முழுவதும் முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி காயங்களுடன் போராடிக்கொண்டு இருந்தது. இதை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

 இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிமணியம் உத்தரவின்பேரில் வனத்துறையினர் அந்த புலிக்குட்டியை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர்.

ஆரோக்கியமாக உள்ளது

ஒருவார சிகிச்சைக்கு பின்னர் அதற்கு தனிக்கூண்டு அமைத்து அதற்குள் அந்த புலிக்குட்டியை விட்டு பராமரித்து வருகிறார்கள். தற்போது பூரண குணம் அடைந்த அந்த புலிக்குட்டி, நன்றாக உணவு சாப்பிட்டு வருகிறது. அத்துடன் அதன் எடையும் அதிகரித்து நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-
மானாம்பள்ளி வனச்சரகத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டபோது புலிக்குட்டியின் வயது 8 மாதம் ஆகும். 90 கிலோ எடையுடன் இருந்தது. முள்ளம்பன்றியை வேட்டையாடியதால் அதன் உடல் முழுவதும் முள்குத்தப்பட்டு இருந்ததுடன், உடலுக்குள்ளும் அதிகளவில் முட்கள் இருந்தன.

 படிப்படியாக அளித்த சிகிச்சையால் அந்த புலிக்குட்டி தற்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. 16 மாதம் வயதான அதன் எடை 118 கிலோவாக அதிகரித்து உள்ளது.

கூண்டில் வேட்டையாட பயிற்சி

பொதுவாக புலிக்குட்டி தாயுடன் இருக்கும்போது அதற்கு வேட்டையாட கற்றுக்கொடுக்கும். ஆனால் இந்த புலிக்குட்டிக்கு வேட்டையாட தெரியாது என்பதால் தமிழகத்திலேயே முதன்முறையாக கூண்டு அமைத்து அந்த புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இதற்காக வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி அருகே உள்ள மந்திரிமடம் என்ற இடத்தில் ரூ.75 லட்சத்தில் 10 ஆயிரம் சதுரஅடிக்கு கம்பிவேலி மூலம் கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த கூண்டுக்குள் இந்த புலிக்குட்டியை வருகிற 16-ந் தேதி முதல் விட்டு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில் புலிகள் திட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பங்கேற்கிறார். புலிக்குட்டி எளிதாக வேட்டையாடி பழகும் வகையில் முதலில் அந்த கூண்டுக்குள் முயல், காட்டுப்பன்றி விடப்படுகிறது. பின்னர் மான் விடப்படும்.

24 மணி நேரம் கண்காணிப்பு

அதன் தேவைக்கு ஏற்ப, அதுவே வேட்டையாடி சாப்பிடும் அளவுக்கு விலங்குகளை கூண்டுக்குள் விட்டு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கூண்டு இருக்கும் இடத்தில் மற்ற விலங்குகள் வருவதை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அத்துடன் அந்த கூண்டை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது.

6 மாதங்கள் இந்த கூண்டுக்குள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் உடல்நிலை, வேட்டையாடும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படும். அதன் பின்னர் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று அந்த புலிக்குட்டியை வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story