செஞ்சியில் பரபரப்பு இரவில் தாலுகா அலுவலகத்துக்குள் புகுந்து நாய்கள் அட்டகாசம் துணை தாசில்தாரின் மேஜை கண்ணாடியை உடைத்து சென்றன


செஞ்சியில் பரபரப்பு இரவில் தாலுகா அலுவலகத்துக்குள் புகுந்து நாய்கள் அட்டகாசம் துணை தாசில்தாரின் மேஜை கண்ணாடியை உடைத்து சென்றன
x
தினத்தந்தி 11 May 2022 10:37 PM IST (Updated: 11 May 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி தாலுகா அலுவலகத்துக்குள் புகுந்து நாய்கள் அட்டகாசம் செய்தது. இதில், துணை தாசில்தாரின் மேஜை கண்ணாடியை உடைத்து போட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


செஞ்சி, 

செஞ்சியில் திண்டிவனம் சாலையில் தாலுகா அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அலுவலர்கள் அனைவரும் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். 

நேற்று காலை, அவர்கள் வந்து பார்த்த போது, அங்குள்ள தலைமையிடத்து துணை தாசில்தாரின் மேஜை மீது இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அலுவலர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தாசில்தார் பழனி செஞ்சி போலீசில், யாரோ மர்ம நபர்கள் கண்ணாடியை உடைத்ததாக புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தங்கம் நேரில் சென்று விசாரணை செய்தார்.

கண்காணிப்பு கேமரா பதிவு

இதையடுத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 நாய்கள்  அலுவலகத்துக்குள் நுழைந்து மேஜை விரிப்பை இழுத்து கீழே தள்ளியதில் கண்ணாடி உடைந்த காட்சி அதில், பாதிவாகி இருந்தது.

 தாலுகா அலுவலகத்தின் கதவுக்கு பூட்டு ஏதும் போட்டு பூட்டப்படாமல் இருந்தது. இதை பயன்படுத்தி, இரவு நேரத்தில் நாய் உள்ளே புகுந்து கண்ணாடியை உடைத்து இருப்பது தெரியவந்தது.

கதவை பூட்டுவதற்கு பூட்டு இல்லை

மாவட்ட வருவாய்த்துறையின் ஒரு நிர்வாக பிரிவாக  இருப்பது தாலுகா அலுவலகம் ஆகும். இங்கு தான், மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வகையான சான்றிதழ்கள் கேட்டு்ம் விண்ணப்பித்தும் வருகிறார்கள். இன்றும் எத்தனையோ மக்களின் விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களில் குவிந்து கிடக்கிறது. 

இப்படி மக்களின் வாழ்வோடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் தாலுகா அலுவலகத்தில் கதவு பூட்டை  பூட்டுவதற்கு ஒரு பூட்டு கூட இல்லாமல் இருப்பது வேதனையின் உச்சம். அதுமட்டுமின்றி இது அதிகாரிகளின் மெத்தனப்போக்கையும் காட்டுகிறது. அதோடு இரவு நேரத்தில் சில நாட்களாக காவலர்களும் இல்லை.

யார் பொறுப்பாவார்கள்?

இதனால் தான் இரவு நேரங்களில் நாய்கள் அலுவலகத்துக்குள் புகுந்து இதுபோன்ற அட்டகாசத்தில் ஈடுபடுகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் எதையும் எடுத்து சென்றாலோ, கிழித்து குதறி நாசம் செய்து சென்றாலோ யார் பொறுப்பாவார்கள் என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது.

நாய்களோடு மட்டுமில்லாமல், கொள்ளையர்கள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றாலும் பாதிக்கப்படுவது மக்கள் தான். எனவே அதிகாரிகள் இதில் அலட்சியப்போக்குடன் செயல்படாமல், இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Next Story