தார்ப்பாய் இல்லாததால் மழையில் நனைந்து முளைத்த நெல் மூடைகள்


தார்ப்பாய் இல்லாததால் மழையில் நனைந்து முளைத்த நெல் மூடைகள்
x
தினத்தந்தி 11 May 2022 5:21 PM GMT (Updated: 2022-05-11T22:51:43+05:30)

போதிய தார்ப்பாய்கள் இல்லாததால் மழையில் நனைந்து முளைத்த நெல் மூடைகளை பார்த்து விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.

ராமநாதபுரம், 
போதிய தார்ப்பாய்கள் இல்லாததால் மழையில் நனைந்து முளைத்த நெல் மூடைகளை பார்த்து விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.
நெல் விவசாயம்
ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் மழையை நம்பி முதுகுளத்தூர், சாயல்குடி, திருஉத்தரகோசமங்கை, தேரிருவேலி, ராமநாதபுரம், நயினார் கோவில் உள்ளிட்ட பல ஊர்களில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இதில் முதுகுளத்தூர் அருகே தெற்குமல்லல், வடக்கு மல்லல், ஆலங்குளம், கடம் போடை உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகளால் விளைவித்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூடைகள் தெற்குமல்லல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிட்டங்கியில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டு உள்ளன. சேமிப்பு கிட்டங்கியில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் கிட்டங்கிக்கு வெளியே ஏராளமான மூடைகள் திறந்தவௌியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால். கிட்டங்கியின் வெளியே திறந்த நிலையில் வைத்திருந்த நூற்றுக்கணக்கான நெல்மூடைகள் நனைந்து, வீணாகி நெல்மணிகள் முளைத்துவிட்டன.  பல மூடைகள் அதிக ஈரப்பதத்துடனும், பூசாணம் பிடித்ததுபோல் கெட்டுப்போய் விட்டதாக கூறப்படுகிறது. 
விவசாயிகள் வேதனை
இதுபற்றி தெற்கு மல்லல், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-  விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூடைகள் சேமிப்பு கிட்டங்கியில் வைக்கப்பட்டு உள்ளன. கூடுதல் இடவசதி இல்லாததால் 500-க்கும் அதிகமான நெல் மூடைகள் கிட்டங்கியில் வெளியே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மூடைகளை பாதுகாப்பாக மூடி வைப்பதற்கு போதிய தார்ப்பாய்கள் இல்லாததால் ஏராளமான நெல் மூடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையில் நனைந்தபடி  இருந்தன. இதனால் பல நெல் மூடைகளில் நெல்மணிகள் முளைத்து வளர தொடங்கி விட்டன. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை தருகிறது. இனியும் இதுபோன்று நடை பெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை தாமதம் இல்லாமல் உடனடியாக அரிசி ஆலைகளுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story