அரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


அரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 5:36 PM GMT (Updated: 11 May 2022 5:36 PM GMT)

அரிமளத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரிமளம்:
டாஸ்மாக் கடை முற்றுகை 
அரிமளம் பேரூராட்சி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் புதிதாக மற்றொரு டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து கடை திறக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் பிரவீனா மேரி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த கடை நிரந்தரமாக மூடப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 
இந்நிலையில் நேற்று திடீரென டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடந்து வந்தது. இதை அறிந்த அரிமளம் பேரூராட்சி பெண்கள் உள்பட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் இன்று ஒன்று சேர்ந்து அக்கடையை முற்றுகையிட்டனர்.
சாலை மறியல் 
அப்போது அந்தகடை மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் எதிரே இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது. பின்னர் மற்றொரு கடை முன்பு பெண்கள் உள்பட பொதுமக்கள் அமர்ந்து தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரிமளம் பேரூராட்சி பகுதியில் செயல்படும் 3 டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரிமளம் போலீசார்  மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படவில்லை.
கடைகளை மூட கோரிக்கை 
இதையடுத்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செரீனாபேகம், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரஹ்மான், அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணு முத்துக்குமார் மற்றும் துணை தாசில்தார் சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது இந்த கடை நிரந்தரமாக மூடப்படும். மீதமுள்ள 2 கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தால் அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் 2 கடைகளும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். 
போக்குவரத்து பாதிப்பு 
மேலும் பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எழுத்துபூர்வமாக உடனடியாக வழங்க இயலாது, கண்டிப்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று 2 கடைகளும் படிப்படியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் இருந்த மதுபானங்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story