தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.
மக்களை குழப்பும் வாகன பதிவு எண்கள்
இருசக்கர வாகன உரிமையாளர்கள் சிலர் தங்கள் வாகன பதிவு எண்களில் ஒரு எண்ணை மட்டும் பெரியதாகவும், மற்றவற்றை கண்ணுக்கே தெரியாத அளவு சிறியதாகவும் அமைத்துள்ளனர். இதுபோன்ற வாகனங்கள் அசம்பாவித சம்பவங்களில் சிக்கும் போது கண்காணிப்பு காமிராவில் கூட சிக்காத வகையில் எண்கள் சிறியதாக உள்ளன. இருசக்கர வாகனங்களில் சரியான முறையில் எங்களை பொறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், வேலூர்.
தாய் சேய் நல விடுதி கட்டிடம் சேதம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேல்சீசமங்கலம் கிராமத்தில் தாய் சேய் நல விடுதி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
-சதீஷ்குமார், செய்யாறு.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே சாய்ந்த நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின் கம்பம் கீழே விழாமல் இருக்க மற்றொரு மின்கம்பம் பக்கவாட்டில் முட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. முட்டுக் கொடுக்கப்பட்ட மின் கம்பம் வளைந்த நிலையில் இருப்பதால் இந்த மின் கம்பம் எந்த நேரம் சாய்ந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே வளைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
ஆபத்தான நிலையில் மேல்நிலை தொட்டி
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் ஊராட்சியில் சமுத்திரம் 2-வது வார்டு கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் கான்கிரீட் தூண்கள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதைச் சீரமைப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
-எம்.ஜெகதீசன், நல்லவன்பாளையம்.
வடிநீர் கால்வாய் கட்டும் பணி முடக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா கொடைக்கால் காலனியில் வடிநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகள் மேலாகியும் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிநீர் கால்வாயை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.
-நரசிம்மன், கொடைக்கல்.
நீர்த்தேக்கத் தொட்டியின் படிக்கட்டுகள் சேதம்
ராணிப்ேபட்டையில் கால்நடை மருத்துவமனை அருகில் நகராட்சி கட்டுப்பாட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதன் மூலம் நான்கைந்து கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தத் ெதாட்டியின் படிக்கட்டுகள் உடைந்துள்ளது. இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
-ஜி.கே.சுரேஷ், காரை.
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்
கண்ணமங்கலத்தை அடுத்த வி.வி.தாங்கல் கிராமத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. அதில் மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வர சிரமமாக உள்ளது. சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே. சிவா, வி.வி.தாங்கல்.
Related Tags :
Next Story