சாராயம் விற்கும் உரிமை ரூ.33 லட்சத்துக்கு ஏலம்


சாராயம் விற்கும் உரிமை ரூ.33 லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 11 May 2022 6:47 PM GMT (Updated: 2022-05-12T00:17:16+05:30)

கள்ளக்குறிச்சி அருகே ஒரு மலைக்கிராமத்தில் சாராயம் விற்கும் உரிமை ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போனது. வியாபாரிகளிடையே ஏற்பட்ட போட்டா போட்டியில் பெண் வியாபாரி ஏலம் எடுத்தார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புளியங்கொட்டை கிராமம் உள்ளது. கல்வராயன்மலை அடிவாரப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். 
கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்பட்டு, புளியங்கொட்டை கிராமத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு சாராயம் விற்பனை செய்ய ஆண்டு தோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்று ஏலம் எடுப்பவரே அந்த கிராமத்தில் ஓராண்டுக்கு சாராயம் விற்க முடியும். வேறு யாருக்கும் சாராயம் விற்க அனுமதி கிடையாது. 

ரூ.33 லட்சத்துக்கு ஏலம் 

அதன்படி இந்த ஆண்டு புளியங்கொட்டை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதற்கான ஏலம் நேற்று விடப்பட்டது. கிராமத்தின் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் முன்னிலையில் இந்த ஏலம் நடந்ததாக கூறப்படுகிறது.
சாராயம் விற்பதற்கு ஏலம் எடுக்க அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இதில் சாராய வியாபாரிகள் பலர் போட்டிபோட்டு ஏலம் கேட்டனர். முடிவில் 35 வயதுடைய பெண் வியாபாரி, சாராயம் விற்பனை செய்யும் உரிமையை ரூ.33 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். 

போலீசார் விசாரணை
 
சாராயம் விற்கும் உரிமை ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போன விவகாரம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இது பற்றி அறிந்ததும் வடபொன்பரப்பி போலீசார் நேரில் சென்று அந்த கிராமத்தில் விசாரித்தனர். அப்போது சிலர் கூறுகையில், இங்கு ஏலம் விடப்பட்டு சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும், இங்கு வந்து சாராயம் குடித்து வருகிறார்கள். ஏலம் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கிராம மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்றனர்.  இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story