திருச்சியில் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து


திருச்சியில் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 12 May 2022 12:49 AM IST (Updated: 12 May 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி,மே.12-
திருச்சியில் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
நட்சத்திர ஓட்டல்
திருச்சி சாலை ரோட்டில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லும் வழியில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே லே டெம்பஸ் போர்ட் என்ற 3 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல் உள்ளது. 5 மாடிகள் கொண்ட இந்த ஓட்டலில் 4-வது மாடியில் தங்கும் அறைகள், ஓட்டல் அலுவலகம், பொருட்கள் சேமித்து வைக்கும் அறைகள் உள்ளன.
இங்கு இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் 4-வது மாடியில் உள்ள அலுவலகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். மேலும் ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து வெளியேறினர். மேலும் புகை மூட்டம் 5-வது மாடிக்கு பரவியது.
மின்மாற்றிகள்
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி மெல்கியு ராஜா தலைமையில் 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் ஓட்டலின் இருபுறமும் மின்மாற்றிகள் இருந்ததுடன், உயர் அழுத்த மின்சார கம்பிகளும் சென்றன. இதனால் தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து மாடிகளிலும் புகைமூட்டம் சூழ்ந்தது.
இதனால் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே மின் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை முடுக்கி விட்டனர். மேலும் கூடுதலாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனமும் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகம் இருந்த அறை அருகே மசாஜ் மையம் செயல்பட்டது. அங்கு இருந்த எண்ணெய்கள் தீப்பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நள்ளிரவு 12 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது.  ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் உடனடியாக அப்புறப் படுத்தப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
 இந்த தீ விபத்தில் நான்காவது மாடியில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் அருகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், டி.வி.க்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story