மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்


மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 May 2022 7:35 PM GMT (Updated: 11 May 2022 7:35 PM GMT)

மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தினார்.

நெல்லை:
கண்காணிப்பு குழு கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு, மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
கூட்டத்தில், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீன தயாள் உபாத்தியாய கிராம மின்வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விரைந்து முடிக்க நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்கள் நலன் கருதி விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் பொது மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு திட்டங்களை விரைவாக செயல்படுத்தி பொது மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தினார்.
நிதி வரவில்லை
கூட்டத்துக்கு பின்னர் ஞானதிரவியம் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் மிக காலதாமதமாக நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்த ஆண்டு உரிய நிதி வரவில்லை. நிதி வந்தால்தான் பணிகளை விரைவுபடுத்த முடியும்,. அதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது’’ என்றார்.
கூட்டத்தில் யூனியன் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் நன்றி கூறினார்.

Next Story