நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை உடல்

நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை உடல்
x
தினத்தந்தி 12 May 2022 1:08 AM IST (Updated: 12 May 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில், ரெயில் தண்டவாளத்தின் அருகே நாய்கள் கடித்து குதறிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடந்தது. அந்த குழந்தையை வீசி சென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை:

பச்சிளம் ஆண் குழந்தை உடல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே நாடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளம் உள்ளது.  இந்த தண்டவாளத்தின் அருகே நேற்று நாய்கள் கூட்டமாக இருந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். 
நாய்கள் கடித்து குதறிய நிலையில்...
அப்போது நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடந்தது தெரிய வந்தது. அந்த குழந்தையின் உடலை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் குழந்தையின் கை, கால்கள் துண்டு, துண்டாக கிடந்தது. 
பின்னர் அந்த குழந்தையின் உடலை ஒரு கூடையில் அந்த பகுதி மக்கள் மூடிவைத்ததுடன் குழந்தையின் உடலை சுற்றி நின்ற நாய்களை அங்கிருந்து விரட்டி விட்டனர். 
வீசி சென்றது யார்?
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து தண்டவாளத்தில் குழந்தையின் உடலை வீசி சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story