தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக ஊழியர்கள் 8 பேர் மீது நடவடிக்கை


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக ஊழியர்கள் 8 பேர் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 11 May 2022 7:52 PM GMT (Updated: 11 May 2022 7:52 PM GMT)

போலி தட்டச்சு சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக ஊழியர்கள் 8 பேர் மீது தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தஞ்சாவூர்:
போலி தட்டச்சு சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக ஊழியர்கள் 8 பேர் மீது தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
8 பணியாளர்கள்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் 8 பணியாளர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பயிற்சியில் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் அளித்து பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டே இவர்கள் பிற மாவட்டங்களில் உள்ள பயிலகம் மூலம் தேர்வுக்கு சென்று தேர்ச்சி பெற்றுள்ளது முறைகேட்டிற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கக தேர்வு வாரிய தலைவருக்கு புகார் சென்றது. இது தொடர்பாக தேர்வு வாரிய தலைவர் விசாரணை நடத்தினார். மேலும் தட்டச்சு பயிற்சி பெறுவதற்காக இவர்கள் விடுப்பு ஏதும் எடுத்தார்களா? என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விவரம் கேட்டபோது, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தவிர விடுப்பு ஏதும் எடுக்கவில்லை என்று விவரம் தெரிவிக்கப்பட்டது.
விளக்கம் கேட்டு நோட்டீசு
பயிலகம் மூலம் தேர்வுக்கு செல்ல குறைந்தபட்சம் 3 மாத காலம் அந்த பயிலகத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் விடுப்பு ஏதும் எடுக்காமல் ஆரணியில் உள்ள பயிலகத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியிருப்பது முரண்பாடாக உள்ளதாக தேர்வு வாரிய தலைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 
இதனால் அந்த 8 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டதுடன், அசல் சான்றிதழை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. 
அசல் சான்றிதழ்
இதனால் தேர்வுவாரிய தலைவர், தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, அந்த 8 பேரிடமும் கடிதத்தை ஒப்படைத்து அசல் சான்றிதழை அனுப்பும்படி அறிவுறுத்தும்படி தெரிவித்து இருந்தார்.
அந்த கடிதத்தில், முறைகேடு நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் ஏன் தங்களது சான்றிதழை ரத்து செய்யக்கூடாது எனவும், தாங்கள் விடுப்பு ஏதும் எடுக்காமல் எவ்வாறு வேறு மாவட்டத்தில் பயிலக மாணவர்களாக பயிற்சி பெற்று தேர்வு எழுதினீர்கள் என்பதற்கான உரிய விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விளக்கம் அளிப்பதற்கு ஏதுமில்லை என கருதி தங்களது தேர்ச்சி சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
ரத்து செய்து நடவடிக்கை
ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தும் இதுவரை பதில் பெறப்படாததால் தங்களின் சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இது குறித்து அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. எனவே அசல் சான்றிதழை 15 தினங்களுக்குள் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதே நேரத்தில் போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விளக்கம் கேட்கப்பட்டவர்களின் தரப்பினர் கூறும்போது, எங்கள் மீது புகார் கூறியது யார்? என விளக்கம் கேட்டு இருந்தோம். அதற்கான பதில் வரும் என காத்திருந்தோம். அதற்குள் சான்றிதழை ரத்து செய்துவிட்டதாக கடிதம் அனுப்பி உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றனர்.

Next Story