ஆடுதுறை-திருநீலக்குடி நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும்


ஆடுதுறை-திருநீலக்குடி நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 11 May 2022 7:56 PM GMT (Updated: 11 May 2022 7:56 PM GMT)

ஆடுதுறை-திருநீலக்குடி நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பேரூராட்சி தலைவர்-கவுன்சிலர் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்:
ஆடுதுறை-திருநீலக்குடி நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பேரூராட்சி தலைவர்-கவுன்சிலர் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் துணைத்தலைவர் கமலா சேகர், முன்னாள் மாவட்ட பா.ம.க. தலைவர் குமார், பேரூராட்சி கவுன்சிலர் பாலதாண்டாயுதம், வன்னியர் சங்க மாவட்ட ஆலோசகர் ரமேஷ், மாவட்ட செயலாளர் மதிவிமல், நகர தலைவர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்வேந்தன், சக்திவேல் ஆகியோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். 
பின்னர் அவர்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவில்கள்
ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணிக்கு மணிமண்டபம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 
ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி பகுதியானது நவகிரகங்கள் ஆன கஞ்சனூர் சுக்கிரன்கோவில், சூரியனார் கோவில், திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோவிலை மையமாக கொண்டுள்ளது.
மேம்பாலம்
இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசிக்க செல்லவும், திருநாகேஸ்வரம் ராகு பகவானை தரிசிக்க செல்லவும் ஆடுதுறை-திருநீலக்குடி நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சாலையின் குறுக்கே கும்பகோணம்-மயிலாடுதுறை வழியாக செல்லும் மின்சார ரெயில் போக்குவரத்து உள்ளதால் ரெயில்கள் செல்லும்போது நெடுஞ்சாலையில் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. விபத்துக்கள் ஏற்படவும் காரணமாக இருக்கிறது. எனவே இவற்றை தவிர்த்திட ஆடுதுறை-திருநீலக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரெயில்வே இருப்பு பாதையை கடந்து செல்வதற்கு ஏதுவாக அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
வேளாண் கல்லூரி
விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் விவசாய கல்வி கற்க ஏதுவாக ஆடுதுறை பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைத்து தர வேண்டும். ஆடுதுறை பஸ் நிலையத்தை அனைத்து வசதிகளும் பெற்ற நவீனமயமாகிய பஸ் நிலையமாக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 
ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு சொந்தமான வீரசோழன் திருமண மண்டபத்தை வருவாய் பெற்றிட ஏதுவாக நிர்வாக நலன் கருதி தனியார் வசம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகையின் அடிப்படையில் பொது ஏலத்திற்கு விட அனுமதி வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story