கோவில் விழாக்களில் தேரோட்டம்


கோவில் விழாக்களில் தேரோட்டம்
x
தினத்தந்தி 12 May 2022 1:30 AM IST (Updated: 12 May 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

குமுளூர், இனியானூர், தச்சன்குறிச்சி பகுதிகளில் உள்ள கோவில் விழாக்களில் தேேராட்டம் நடைபெற்றது.

கல்லக்குடி, மே.12-
குமுளூர், இனியானூர், தச்சன்குறிச்சி பகுதிகளில் உள்ள கோவில் விழாக்களில் தேேராட்டம் நடைபெற்றது.
தேரோட்டம்
புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூர் கிராமத்தில் ஆயிரவள்ளியம்மன் கோவில் உள்ளது. மேலும் இங்கு அய்யனார், கருப்பு, மதுரைவீரன் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3-ந் தேதி சக்தி கரகம் அழைத்து காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் பூதவாகனம், அன்னவாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சோமரசம்பேட்டை
சோமரசம்பேட்டை அருகே  இனியானூரில் குழுமாயி அம்மன், ஒண்டி கருப்பு கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த 27-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அலங்கரிக்கப்பட்டு இருந்த குழுமாயி அம்மன் படம் வைக்கப்பட்டு இருந்தது. தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) மருளாளி குட்டிகுடித்தல் நிகழ்ச்சியும்,  நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், சாமி குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
தச்சன்குறிச்சி குளுந்தாளம்மன் கோவில்
லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி குளுந்தாளம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் கேடயம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பின்னர் பக்தர்கள் வடம்பிடிக்க தேரோட்டம் தொடங்கியது.  தேர்முட்டி தெரு, நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, பெருமாள் கோவில் தெருக்களின் வழியாக சென்று மீண்டும்  கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு முத்துபல்லக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
பெருவளப்பூர்
இதேபோல்  புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன், செல்லியம்மன் கோவில்  ஆண்டுபெருவிழா அக்னி சட்டி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவு பெற்றது.

Next Story