பனமரத்துப்பட்டியில் காவலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது
பனமரத்துப்பட்டியில் காவலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பனமரத்துப்பட்டி,
பனமரத்துப்பட்டி பேரூராட்சி களரம்பட்டியை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 76). இவர் பனமரத்துப்பட்டி காந்திநகர் சினிமா தியேட்டர் பின்புறம் உள்ள பருப்பு மில்லில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு 10 மணி அளவில் அவர் பருப்பு மில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பருப்பு மில்லின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே குதித்த 2 பேர் அங்கிருந்த சின்னகண்ணுவிடம் மில்லின் உள்ளே உள்ள இரும்பு, பித்தளை, செம்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து தருமாறு கூறி மிரட்டியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த காவலாளி சின்னகண்ணுவை அவர்கள் தாக்கி அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம், செல்போன், கைக்கெடிகாரம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சேலம் ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று பனமரத்துப்பட்டி 10-வது வார்டு பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகனான கூலித்தொழிலாளி சங்கர் (22) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் காவலாளியை தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.