ஓமலூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
ஓமலூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த பாகல்பட்டி ஊராட்சி தாசநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய மனைவி எஸ்தர், நிறைமாத கர்ப்பிணி. இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து வினோத்குமார் ஆஸ்பத்திரிக்கு எஸ்தரை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஓமலூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் குழுவினர் தாசநாயக்கன்பட்டிக்கு சென்று அவரை சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் எஸ்தருக்கு ஆம்புலன்சிலேயே வலி அதிகரிக்கவே, ஆம்புலன்ஸ் பணியாளர்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து எஸ்தர் மற்றும் ஆண் குழந்தை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு மகப்பேறு டாக்டர் தாரணி, குழந்தைக்கும், தாயாருக்கும் சிகிச்சை அளித்தார். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story