பெரியவெண்மணி கிராமத்தில் நாச்சாரம்மன் கோவில் தேரோட்டம்


பெரியவெண்மணி கிராமத்தில் நாச்சாரம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 9:43 PM GMT (Updated: 2022-05-12T03:13:34+05:30)

பெரியவெண்மணி கிராமத்தில் நாச்சாரம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

குன்னம், 
நாச்சாரம்மன்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி கிராமத்தில் நாச்சாரம்மன், மாணிக்கம்மன், மாக்காயி அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா கடந்த 3-ந்  தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்றது. நேற்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 
அதைத்தொடர்ந்து நாச்சாரம்மன், மாணிக்கம்மன், மாக்காயி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இந்த விழாவில் கொளப்பாடி, சின்னவெண்மணி, புதுவேட்டகுடி, காடூர், நல்லறிக்கை, வேப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன், கருப்பையா, முருகன், வரதராஜபெருமாள், மதுரைவீரன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 3-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, குடியழைத்தல் சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. கடந்த 7-ந்தேதி தேதி வரை நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8-ந்தேதி மாவிளக்கு பூஜையும், 9-ந்தேதி தேதி அலகு குத்துதல், அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்தல் மற்றும் சிறப்பு பூஜைகளும், 10-ந்தேதி குடியழைத்தல், பொங்கலிட்டு மாவிளக்கு பூஜையும், சாமி புறப்பாடும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில், கோனேரிபாளையம் உள்பட சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

Next Story