நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றம்; படகு போக்குவரத்து நிறுத்தம்


நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றம்; படகு போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 11 May 2022 10:01 PM GMT (Updated: 11 May 2022 10:01 PM GMT)

நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. அதனால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அம்மாபேட்டை
நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. அதனால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 
கட்டளை கதவணை
மேட்டூர் அணையில் இருந்து திருச்சி வரை காவிரி ஆற்றின் குறுக்கே நீர் மின் உற்பத்திக்காக பல இடங்களில் கட்டளை கதவணைகள் கட்டப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி, ஊராட்சிகோட்டை, பாசூர் உள்ளிட்ட இடங்களில் கட்டளை கதவணைகள் உள்ளன. 
இந்தநிலையில் நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பராமரிப்பு பணிகளுக்காக தேக்கி வைக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும். 
படகு போக்குவரத்து நிறுத்தம்
 அதன்படி பராமரிப்பு பணிகளுக்காக நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு தண்ணீர் முழுவதுமாக திறக்கப்பட்டது. இதனால் கடல் போல் காட்சி தந்த காவிரி ஆறு, பாறைகளாக காட்சி தருகிறது. 
நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து பிரசித்தி பெற்றதாகும். ஈரோடு மாவட்டத்தையும், சேலம் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் நடைபெறும் இந்த படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.  
குடிநீர் தேவை
இதேபோல் அம்மாபேட்டை, ெநரிஞ்சிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள 25 கிராமங்களில் குடிநீர் தேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 
இதேபோல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் மீன்பிடிக்கும் தொழிலாளர்களும் வருவாயை இழந்துள்ளனர். 

Next Story