முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18-ந் தேதி சேலம் வருகை ஆத்தூர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18-ந் தேதி சேலம் வருகை ஆத்தூர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2022 10:24 PM GMT (Updated: 2022-05-12T03:54:50+05:30)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 18-ந் தேதி சேலம் வருகிறார். அன்றைய தினம் ஆத்தூரில் நடைபெறும் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்ட ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம், 
மு.க.ஸ்டாலின் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 18-ந் தேதி சேலம் வருகிறார். அவர் சேலத்தில் அன்றைய தினம் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், அவர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைக்கிறார். 
இதை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எங்கு நடத்துவது என்பது குறித்தும், 3 இடங்களை தேர்வு செய்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று ஆய்வு செய்தார். குறிப்பாக சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் 3 ரோடு பகுதியில் உள்ள ஜவகர் மில் மைதானம் மற்றும் சீலநாயக்கன்பட்டி என 3 இடங்களை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
இந்த பகுதிகளில் மேடை அமைக்கலாமா? அவ்வாறு அமைத்தால் வாகனங்கள் நிறுத்தும் இடம், பொதுமக்கள் வந்து செல்ல வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடம் தேர்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுக்கூட்டம்
இதைத்தொடர்ந்து 18-ந் தேதி அன்று, ஆத்தூர் செல்லியம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் காலி மைதானத்தில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திலல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதில், தமிழக அமைச்சர்கள், தி.மு.க. முன்னணி தலைவர்கள் பங்கேற்று தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து பேச உள்ளனர்.
இதனிடையே கூட்டம் நடைபெறும் செல்லியம்பாளையம் பகுதியில் உள்ள மைதானத்தை, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். 
இந்த ஆய்வின் போது ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story