பஸ் கூரையின் மீது ஏறி பயணம் செய்த மாணவர்களை தட்டிக்கேட்டதால் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
பஸ் கூரையின் மீது ஏறி பயணம் செய்ததை தட்டிக்கேட்ட டிரைவர், கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ஆவடி,
ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து ஆவடி நோக்கி நேற்று காலை தடம் எண் 61-கே என்ற அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பொதுமக்களும் இருந்தனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலரும் பயணித்தனர். ஆவடி எச்.வி.எப். சாலையில் பஸ் வந்த போது, மாணவர்களில் சிலர் பஸ் மேற்கூரையின் மீது திடீரென ஏறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் தங்கராஜ் (வயது 35) பஸ்சை உடனடியாக நிறுத்தினார். பஸ் கண்டக்டர் சர்வேசன் (48) மாணவர்களை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். அப்போது மாணவர்கள் பஸ், கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டிரைவர் தங்கராஜ் மற்றும் கண்டக்டர் சர்வேசன் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து பஸ்சை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்று மாணவர்கள் மீது கண்டக்டர் சர்வேசன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடி அடுத்த கரலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவனை கைது செய்து விசாரிக்கின்றனர். தொடர்ந்து ஆவடி புதிய கன்னியம்மன் நகரை சேர்ந்த முதலாமாண்டு படிக்கும் 17 வயதுடைய 2 மாணவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story