மும்பையில் இருந்து கடத்தல்: விமான கழிவறையில் ரூ.16 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை
மும்பையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.16 லட்சம் தங்க கட்டிகள் விமான கழிவறையிலிருந்து சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் மும்பையில் இருந்து வந்த விமானத்தை கண்காணித்தனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக யாரும் இல்லை. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று சோதனை செய்தனர். அதில், விமான இருக்கை, ஊழியர்கள் அறை ஆகியவற்றில் சோதனை செய்த போது, எதுவும் கிடைக்காததால் விமான கழிவறைக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 3 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து, ரூ.16 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 349 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story